மகிழ்ச்சி...! அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து...! அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
அரிட்டாப்பட்டி டஸ்ங்டன் சுரங்க ஏல உரிமையை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேற்று நேரில் சந்தித்தனர்.
மத்திய அமைச்சரிடம், மேலூர் தொகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அமைச்சர் கிஷன் ரெட்டி விவசாயிகளுக்கு உறுதி அளித்தார்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; நேற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போராட்டக்குழுவினர், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் மற்றும் பல கலாசார பாரம்பரிய தலங்களை உள்ளடக்கி உள்ளதாக கூறியிருந்தனர். தற்பொழுது டங்ஸ்டன் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என கூறினார்.