அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து... அண்ணாமலை & மத்திய அமைச்சருக்கு நாளை பாராட்டு விழா...!
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாளை அப்பகுதி மக்கள் பாராட்டு விழா நடத்த உள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை கடந்த வாரம் நேரில் சந்தித்தனர்.
இதையடுத்து நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு நன்றி மற்றும் பாராட்டுத் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பகுதி மக்கள் விழா எடுத்தனர். இந்த நிலையில் தற்பொழுது மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களுக்கு நாளை அரிட்டாப்பட்டி மக்கள் பாராட்டு விழாவை நடத்த உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பகுதி அம்பலகாரர்கள், கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, பொதுமக்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
கிராம மக்கள் பிரதிநிதிகள் குழு, நமது மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களைச் சந்தித்தபோது, அவரை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தன்னரசு மத்தம் மேலநாடு பொதுமக்கள் மற்றும் அம்பலகாரர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அவர்கள், வரும் ஜனவரி 30, 2025 அன்று மாலை 4 மணிக்கு, மதுரை அ.வல்லாளப்பட்டிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார் என தெரிவித்துள்ளார் .