அதிக நேரம் உட்கார்ந்துகிட்டே இருக்கீங்களா..? இது எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா..? எச்சரிக்கும் புதிய ஆய்வு..
இந்த நவீன காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையையே பின்பற்றுகின்றனர். இதனால் சுறுசுறுப்பாக இருப்பதை விட உட்கார்ந்திருப்பதில் அதிக நேரம் செலவிடப்படுகிறது. ஆனால், இது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பலர் 8-10 மணி நேரம் தங்கள் மேசைகளில் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எச்சரிக்கும் புதிய ஆய்வு
அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் பலரும், குறைந்த நேரம் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலும் அதிகமாக உட்கார்ந்திருப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆம். ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது இதயப் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
உட்கார்ந்த வாழ்க்கை முறை பல சுகாதார பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது எம்ஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது ஒரு நாளுக்கு 10.6 மணிநேரம் உட்கார்ந்திருந்தால், அதிக இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறைவான நேரம் உட்கார்ந்திருக்கும் மக்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து குறைவாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வில் 89,530 பேரின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவர்கள் ஒரு வாரத்திற்கு உடற்பயிற்சி கண்காணிப்பாளரைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டனர். பலர் ஒரு நாளைக்கு 9.4 மணிநேரம் அமர்ந்திருந்தாலும், 10.6 மணிநேரம் உட்கார்ந்திருப்பவர்களில் அதிக பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலும், இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40% அதிகமாக இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக நேரம் உட்காருவதால் வரும் ஆபத்து என்னென்ன?
அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கொழுப்பு அளவு மற்றும் CO2 அளவைக் கட்டுப்படுத்தும் திறனைக் குறைக்கிறது.
அதே போல் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கொலஸ்ட்ரால் அளவை எதிர்மறையாக பாதிக்கலாம். மேலும், இதய ஆரோக்கியத்தின் அபாயத்தை அதிகரிக்கும். அது மட்டுமின்றி இது பெருங்குடல், மார்பக போன்ற புற்றுநோய்க்கான ஆபத்தையும் அதிகரிக்கிறது.. இது உடலில் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, ஆழமான நரம்பு ரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. இவை தவிர கால்கள், , முதுகெலும்பு மற்றும் தோள்களில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது.
அபாயங்களை எப்படி குறைப்பது?
அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க உட்காருதல் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் சரியான சமநிலையை நிர்வகிக்க வேண்டும். அதாவது உட்கார்ந்து வேலை செய்யும் போது அடிக்கடி எழுந்து நடக்க முயற்சிக்கவும். ஒவ்வொரு 30-60 நிமிடங்களுக்கும், உங்கள் கேபினைச் சுற்றி சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். அல்லது தொலைபேசியில் பேசும் போது நின்றுகொண்டே பேசுங்கள்.
ஸ்டாண்டிங் டெஸ்க்குகள் அல்லது டிரெட்மில் மேசைகள் போன்ற உபகரணங்கள் மூலம் உங்கள் பணிச்சூழலை நீங்கள் மாற்றலாம். அவை வேலை செய்யும் போது கூட உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வகையில் நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நினைவூட்டும் உடற்பயிற்சி டிராக்கரை அணிந்துகொள்ளலாம்.
நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்தாலும், உட்காருவதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளை குறைக்க முடியாமல் போகலாம், எனவே நாள் முழுவதும் உட்கார்ந்த நேரத்தைக் குறைப்பது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.
Read More : மருந்து மாத்திரைகளை விட, மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவராணி இது தான்!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்…