சொந்த வீடு வாங்க போறீங்களா? இனி ஏமாற வேண்டாம்.. பில்டர்களுக்கு மத்திய அரசு வைக்கும் செக்!
வீடு விற்பனையில் முறைகேடுகளை தடுக்கவும், நுகர்வோர் நலன் பாதுகாப்புக்காக விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுதும் வீடு, மனை விற்பனையில் நடைபெறும் தவறுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வீடு அல்லது மனை வாங்குபவர்களுக்கு உதவுவது ஆகியவை தான் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்த சட்டத்தின்படி, எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வீடு, மனை அடங்கிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் குறிப்பாக, வீடு, மனை விற்பனைக்கான முன்பதிவு செய்வதில் துவங்கி, ஒப்படைப்பு வரையிலான பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்க வேண்டும்.
கட்டுமான ஒப்பந்தம், கிரைய பத்திரம் ஆகியவற்றில் சட்ட ரீதியாக இடம்பெற வேண்டிய விஷயங்கள் ரியல் எஸ்டேட் சட்டத்தில் வரையறுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் வீடு அல்லது மனையை வாங்க ஒருவர் முடிவு செய்யும் நிலையில், அதற்கான விலையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்வார். இந்த ஒப்பந்தம் தற்போது வரை சாதாரண முறையிலேயே இருக்கிறது. கிரைய பத்திரம், கட்டுமான ஒப்பந்தத்துக்கு இணையாக, இதில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை, வீட்டு மனை வாங்குவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க ஏகப்பட்ட சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை இயற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த துறை மேலும் சில நடவடிக்கைகளை இயற்ற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஃபிளாட் புரோமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி. மணிசங்கர், "எந்தவொரு வீடு அல்லது அப்பார்ட்மெண்டுகளின் விளம்பரத்தை எடுத்துக்கொண்டாலுமே, "அது இருக்கிறது... இது " என்று பல பல வார்த்தை ஜாலங்களை பார்க்கிறோம். சில நேரங்களில் இந்த விளம்பரங்களில் ஒரு வசதியே இரண்டு மூன்று வசதிகளாகக் காட்டப்படுகிறது.
உதாரணமாக டென்னீஸ் கோர்டு ஒன்று உண்டு என்றால், அதை ஷட்டில் கோர்டு, பேட்மிட்டன் கோர்டு என மூன்று வசதிகளாக காட்டப்படுகிறது. மேலும் இந்தந்த வசதிகள் உளனன என பொய் விளம்பரங்களும் வருகின்றன. கூடவே பில்டர்கள் ஓப்பன் கார் பார்க்கிங்கை காசு வாங்கிக்கொண்டு விற்று விடுகின்றனர். இந்த மாதிரியான பிரச்னைகளை தடுக்கத்தான் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சில கட்டடங்களில் கிளப் வசதி உள்ளது. அந்த கட்டடத்தில் ஃபிளாட் வாங்கியிருந்தாலும் கிளப்புக்கு செல்ல பணம் கட்ட வேண்டும். கட்டடம் கட்டிய மூன்று ஆண்டுகளுக்கு மெயின்டெனன்ஸ் கட்டணத்தை பில்டர்களுக்கு கட்ட வேண்டும். ஒரு வீடு நன்றாக கட்டியிருக்கும்பட்சத்தில் எதற்கு மெயின்டெனன்ஸ் தொகை? இவை இரண்டுமே மிகப் பெரிய தவறுகள் ஆகும். இவற்றுக்கெல்லாம் செக் வைக்கும் விதமாகத்தான் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் அரசு புதிய புதிய நடைமுறைகளை இயற்றுகின்றது. தவறு செய்பவர்கள் தான் இதற்கு பயப்பட வேண்டும். மற்றப்படி, இது மக்களுக்கு மிக மிக சாதகமானது. தேர்தல் முடிவிற்கு பிறகு, இந்த நடைமுறைகள் அமலாவதை எதிர்பார்க்கலாம்" என்று கூறினார்.