கார் வாங்கப்போறீங்களா..? லேட் பண்ணாதீங்க..!! நஷ்டம் உங்களுக்கு தான்..!!
மாருதி சுஸுகியில் தொடங்கி பல்வேறு நிறுவனங்களும் புத்தாண்டு முதல் கார் விலையை கணிசமாக ஏற்ற வாய்ப்புள்ளது. ஜனவரி முதல் மாருதி நிறுவனத்தின் கார்கள் விலை உயர்வு காண்பது உறுதியாகியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக்கு மாருதி நிறுவனம் வழங்கிய அறிவிக்கையில் இந்த விவரம் அடங்கியுள்ளது. ஆனால், எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. இருசக்கர வாகனத்தில் இருந்து தங்கள் முதல் காருக்கு முன்னேற விரும்புவோர் முதல் சொகுசுக் கார் பிரியர்கள் வரை, பல தரப்பினருக்கான பல வகையிலான கார்களை மாருதி தயாரித்து வருகிறது. அவை ரூ.4 லட்சத்தில் தொடங்கி ரூ.35 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கின்றன.
சாமானியர்களின் முதல் தேர்வாக இருக்கும் மாருதி, அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மத்திய வர்க்கத்தினருக்கான பல்வேறு கார்களை புழக்கத்தில் விட்டிருக்கிறது. தரம், பாதுகாப்பு, உறுதி ஆகியவற்றில் சமரசமின்றி தயாரிப்புகளை வெளியிடுவதாக கூறும், மாருதி இந்த வகையில் இந்தியாவில் முன்னணி வகித்து வருகிறது. எனினும், தயாரிப்பு செலவினங்கள் உயர்வு கண்டது மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களினால் தவிர்க்க முடியாத விலை உயர்வினை மாருதி அறிவிக்கவுள்ளது.
முன்னதாக ஜனவரி, 2023இல் கார்களின் விலையில் 1.1 சதவீதம் என்றளவுக்கு உயர்த்தி மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது மீண்டும் அடுத்த புத்தாண்டுக்கு புதிய விலை உயர்வை அறிவிக்கவுள்ளது. எனவே, தங்களது முதல் காரை மாருதி நிறுவனத்தில் வாங்க விரும்புவோர், டிசம்பருக்குள் ஒரு முடிவுக்கு வருவது லாபகரமாக அமையக் கூடும். மேலும், மாருதி சுஸுகியைத் தொடர்ந்து, சந்தையில் இருக்கும் மற்ற கார் நிறுவனங்களும், தங்கள் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.