ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்.? உங்களுக்கு தான் மத்திய அரசின் எச்சரிக்கை.!
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு மக்கள் இணையதள சேவைகளை பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டங்களில் உள்ள முக்கியமான பல குறைகளை கண்டறிந்து அதன் பயனளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த குறைபாடுகள் ஆண்ட்ராய்டு வெர்சன்களான 11,12,12l,13,14 உள்ளிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் அப்டேட்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த குழு தெரிவித்து இருக்கிறது.
இந்தக் குறைகளை பயன்படுத்தி உங்கள் செல்போன்களில் உள்ள முக்கிய தகவல்கள் திருடப்படலாம் எனவும் நீங்கள் குறிப்பிட்ட இணையதள சேவையை பயன்படுத்துவதையும் முடக்க முடியும் எனவும் அந்த குழு எச்சரித்து இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டங்களில் இருக்கும் இந்த குறைகளின் மூலம் உங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் சைபர் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரித்திருக்கிறது.
இந்த எச்சரிக்கைகளை கூகுள் நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் வெளியான கூகுள் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அறிக்கையில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இருக்கும் குறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றை சரி செய்வது தொடர்பான புதிய பாதுகாப்பு அப்டேட்டுகள் பயனர்களுக்கு விரைவில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது.