கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி முடிக்க தாமதம் செய்கிறார்களா..? மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!
கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் சொன்னபடி, புதிய வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்காமல் கால தாமதம் செய்தால், அவர்கள் மீது வாரண்ட் பிறப்பித்து இழப்பீடு, அபராதத்தை வசூலிப்பதற்கு, புதிய வழிமுறையை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
வீடு கட்ட ஆசைப்படும் பல நடுத்தர வர்க்கத்தினர், ஆசையுடன் கட்டுமான நிறுவனங்களை அணுகுகிறார்கள். ஆனால், சில கட்டுமான நிறுவனங்கள் சொன்னபடி கட்டிடங்களை கட்டியும் தருவது இல்லை. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளை வழங்குவதும் இல்லை. ஆனால், பணத்தை மட்டும் கட்டுமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்தால், அது குறித்து பொதுமக்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளிக்கும் வசதி இருக்கிறது. இந்த புகார்களை விசாரிக்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறது.
ஆனால், இந்த உத்தரவை கட்டுமான நிறுவனங்கள் அலட்சியப்படுத்தும் நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையிடும் நிலை இருக்கிறது. அதை விசாரிக்கும் ஆணையம், புகாருக்கு உள்ளான கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடுகிறது.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் மத்திய வீட்டுவசதி அமைச்சகம் சார்பில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து 'அபராதம் அல்லது இழப்பீட்டை வசூலிக்கும் அதிகாரத்தை, மாவட்ட அளவிலான கூடுதல் மாஜிஸ்திரேட் அல்லது கூடுதல் ஆட்சியர் ஆகியோருக்கு அளிக்கலாம் என்றும் இவர்களை வருவாய் மீட்பு அலுவலர்களாக செயல்பட அனுமதிக்கலாம்' என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த நடைமுறை அமலில் இருக்கிறது. இதேபோன்ற நடைமுறை தமிழ்நாட்டிலும் பின்பற்றப்பட்டால், வீடு வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் நிபுணர்கள்.
Read More : தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வெடித்த ஃபிரிட்ஜ்..!! பரபரப்பில் ராணிப்பேட்டை..!! என்ன காரணம்..?