ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலகத் தயாரா..! திமுக எம்எல்ஏ-க்கள் கேள்வி..?
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களான, ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் விஷச்சாராய விவகாரத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை.மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்று கூறி அவர்களுக்கு கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேசிய அவர்கள், எங்கள் மீதான புகார்களை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றத்தை நிரூபித்தால், பொதுவாழ்வில இருந்து விலகத் தயார், அதேபோல் அந்த குற்றச்சாட்டை அவர்கள் நிருபிக்க தவறினால், பொதுவாழ்வில இருந்து விலகத் தயாரா என்று எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு ஆளும் திமுக அரசு தான் காரணம் என்றும் அதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை திமுக எம்.எல்.ஏக்கள் மறுத்துள்ளனர்.