அரபு நாடு To கேரளா - வாக்களிக்க பறந்து வந்த 30,000 பேர்..!
கேரளாவில் ஒரே கட்டமாக 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே அரபுநாடுகளில் இருந்து 30,000 பேர் கேரளா திரும்பியுள்ளனர்.
நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2வது கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 26) 89 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்ந்தது. கேரளாவில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கேரளாவைப் பொறுத்தவரையில் அரபு நாடுகளில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலின் போதும் தவறாமல் வாக்களிக்க வருகை தந்து ஜனநாயகக் கடமையை செய்துவிட்டு திரும்புகின்றனர். தற்போது ஒரே கட்டமாக கேரளாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் கடந்த சில வாரங்களாக அரபு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில் சுமார் 30,000 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு திரும்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.