வந்தாச்சு...! பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!
பள்ளிக்கல்வி அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொதுத் தேர்வுகள் பள்ளிக் கல்வித் துறை இயக்ககங்களைச் சார்ந்த உயர் அதிகாரிகள் / இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களை தேர்வுப் பணிகள் கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து , மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்ட ஆணையில்; தேர்வுமுறை சீர்த்திருத்த வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் நடத்தப்படும் மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஆசிரியர் பட்டயக்கல்வி ஆகிய தேர்வுகளுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் / தொடக்கக் கல்வி இயக்ககம் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை, ஆசிரியர் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆகிய துறைகளைச் சார்ந்த இணை இயக்குநர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியும், அவ்வாறு தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படும் இணை இயக்குநர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு தெரியப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியும் ஆணை வெளியிடப்பட்டது.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் தற்போது மார்ச் / ஏப்ரல் 2024ல் நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் பிற இயக்ககங்களைச் சார்ந்த இயக்குநர் / இணை இயக்குநர் / துணை இயக்குநர் ஆகியோரை தேர்வு பணிகளை மேற்பார்வையிடச் செல்ல வேண்டிய மாவட்டங்களின் விவரங்களை இவ்வரசாணையின் இணைப்பில் உள்ள அட்டவணையில் உள்ளவாறு தெரிவித்து, அரசளவில் முடிவு செய்து அரசாணை வழங்க வேண்டும்.
மேலும் தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் இயக்குநர் / இணை இயக்குநர் / துணை இயக்குநர்களுக்கான பயணப்படி (TA) மற்றும் தினப்படி (DA) பட்டியல்களை அவரவர்கள் பணிபுரியும் இயக்ககம் / அலுவலகத்திலேயே உரிய கணக்குத் தலைப்பில் சமர்ப்பித்து பெறுவதற்கு அனுமதி வழங்கிடுமாறும், மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் எதிர்பாராத சூழ்நிலையில் தேர்வுப்பணி மேற்பார்வையிட செல்ல இயலாத சூழ்நிலை ஏற்படின், அவ்வமையம் அவ்வலுவலருக்கு பதிலாக வேறு அலுவலரை நியமனம் செய்யும் அதிகாரத்தினை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநருக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..