1000 அடியில் விழுந்த பனிச்சறுக்கு வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!. நெகிழ்ச்சி தருணம்!
Apple Watch: ஆப்பிள் வாட்ச் மாடல்கள், அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத் துடிப்பு, ஈசிஜி மற்றும் பலவற்றை அளவிடும் சென்சார்களைப் பயன்படுத்தி, பயனர்களின் ஆரோக்கியத்தில் உள்ள அசாதாரணங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையினைக் கண்டறிந்து, உயிர்களைக் காப்பாற்றியது பற்றி பல சம்பவங்கள் இதற்கு முன்னர் நடைபெற்றுள்ளது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம், அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் சுமார் 1,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்த ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் உதவியுடன் காப்பாற்றபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, வாஷிங்டனில் உள்ள உள்ளூர் காவல்துறைக்கு ஆப்பிள் வாட்சிலிருந்து அழைப்பு வந்தது. அப்போது பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒரு பனிச்சறுக்கு வீரர் சுமார் 1,000 அடி கீழே விழுந்து காயம் அடைந்தார் என்பது குறித்த எச்சரிக்கை செய்தது. இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹெலிகாப்டரில் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, காயமடைந்த இரு சறுக்கு வீரர்கள் அங்கு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றியது தொடர்பான சம்பவத்தை விவரித்திருந்தார். அதில் தனது தந்தை வீட்டில் தனியாக இருந்தபோது விழுந்து சுயநினைவை இழந்ததாக கூறினார்.
அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் விழுந்ததைக் கண்டறிந்து தானாகவே அவசர சேவைகளை எச்சரித்தது. இதனால் உடனடியாக வீட்டிற்கு சென்று அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.