UP: திடீரென இடிந்த அடுக்குமாடி கட்டிடம்... ஒருவர் மரணம் 6 பேர் படுகாயம்...!
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் காவல் நிலைய பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்தபோது உள்ளே ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். விபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இரண்டு மாடி கட்டிடத்தில் உள்ள 12 கடைகளில் பழுது நீக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
மேலும் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மதியம் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு ஜேசிபி வரவழைக்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இடிபாடுகளில் இருந்து சுமார் 6 தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், கடைசியாக வந்த தகவல்களின்படி, இன்னும் பலர் உள்ளே சிக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமடைந்ததைக் கண்டு NDRF குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். தொழிலாளர்களை உள்ளே இருந்து வெளியேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.