யார் வேண்டுமானாலும்!… எங்கு வேண்டுமானாலும்!… ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!
எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில், ரேஷன் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலமாக, பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வசித்தால், வசிக்கும் பகுதிகளிலேயே தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்வது, நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் படி, பிற மாநிலத்தவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும் என, மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், பிற மாநிலத்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகின்றன.
இது பற்றி, கோவையில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்த போது, 'வட மாநில கார்டுகளுக்கு ரேஷனில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஒதுக்கீடு வழங்குவதில்லை. வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில்லை. ஆனால் அதிகாரிகள், பொருட்கள் கொடுக்க சொல்லி வலியுறுத்துகின்றனர். மற்ற கார்டுதார்களுக்கு என, வழங்கியுள்ள பொருட்களை நாங்கள் அவர்களுக்கு எப்படி வழங்க முடியும்' என்றனர்.
இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது, வட மாநிலத்தவர்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை என, கோவையில் எந்த புகாரும் வரவில்லை. பிறமாநிலத்தவர்கள், பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் அரிசி, கோதுமை கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டு இருக்கிறோம். அவர்களுக்கு என, தனியாக பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என ரேஷன் ஊழியர்கள் சொல்லக்கூடாது. ஒரு ரேஷன் கடையில் கார்டுதாரர்கள் எல்லோரும் பொருட்கள் வாங்குவதில்லை. 75 சதவீதம் பேர் மட்டுமே பொருட்கள் வங்குகின்றனர். மீதம் 25 சதவீதம் கார்டுகளுக்கான பொருட்கள், ஒவ்வொரு கடையிலும் கையிருப்பு உள்ளது. அதிலிருந்து பிற மாநிலத்தவர் மற்றும் பிற மாவட்ட கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.
பொருட்கள் இருப்பு இல்லை என்றால், கேட்டு பெற்றுக்கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 15 பேர் மட்டுமே அரிசி, கோதுமை பொருட்கள் வாங்கி உள்ளனர். மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 90 ஆயிரம் பேர் வாங்கி உள்ளனர். வட மாநிலத்தவர் தங்கி உள்ள இடங்களுக்கு நேரில் சென்று, பொருட்கள் வாங்கி கொள்ள அழைத்தோம். அவர்கள் தனி நபர்களாக தங்கி இருப்பதால், ரேஷன் பொருட்கள் வாங்க வரவில்லை. அவர்களது குடும்பத்தினர் அந்த பொருட்களை, சொந்த மாநிலத்தில் வாங்கி கொள்கின்றனர். அதனால் ரேஷன் கடை ஊழியர்கள், வடமாநிலத்தவர் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் பொருட்கள் கேட்டால், மறுக்காமல் கொடுக்க வேண்டும். மறுத்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.