மத்திய நிதியமைச்சரிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்..!! வைரலாகும் வீடியோ..!!
ஜிஎஸ்டி வரியால் தொழிலே செய்ய முடியாத நிலை உள்ளதாக நிதியமைச்சரிடம் குற்றம்சாட்டிய அன்னபூர்ணா சீனிவாசன், ஒரு நாள் இடைவெளியில் நிதியமைச்சரிடமே மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி இருப்பதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளருமான சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து பேசினார். ஸ்வீட், கார வகை உணவுப் பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வேண்டும் என கொங்கு மண்ணிற்கே சொந்தமான நகைச்சுவை பாணியில் பேசினார். ஒரே சமையலர் செய்யும் ஒவ்வொரு வகை இனிப்புக்கும், காரத்துக்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி விதிப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது கேட்க வேண்டுமானால், ஜனரஞ்சமாக இருக்குமே தவிர, ஜிஎஸ்டியை எதிர்ப்பவர்களுக்குத்தான் சாதமாக அமையும் என்று தெரிவித்தார். இதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படப்போவதில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் தான், அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, தான் எந்த கட்சியிலும் இல்லை என்றும், இனிப்பு காரம் பிரச்சனைக்கு வருத்தமும் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோவில், ஜிஎஸ்டி குறித்து தாங்கள் பேசியது தமக்கு வருத்தமில்லை என்றும், வானதி சீனிவாசன் கடைக்கு வந்து சண்டை போடுவதாக குறிப்பிட்டது தான் அதிர்ச்சி அளித்ததாக நிர்மலா சீதாராமன் பேசுவதும் பதிவாகியுள்ளது. ஜிஎஸ்டி குறித்து ஜாலியாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனமான நிலையில், அன்னபூர்ணா சீனிவாசன் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Read More : வாகன ஓட்டிகளே..!! மறந்துறாதீங்க..!! போலீசிடம் சிக்கினால் என்ன ஆகும் தெரியுமா..?