Breaking: கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு...!
கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதுதற்போது இலங்கை திரிகோணமலைக்கு வடகிழக்கே 200 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 470 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும். அதனைத் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கரையோரம், மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நவ.30-ம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் (‘ரெட் அலர்ட்’), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.