அதிமுக டிடிவி வசம் வந்துவிடும் என அண்ணாமலை கூறுவற்கு அவர் என்ன ஜோசியரா..? செல்லூர் ராஜூ கேள்வி..!
மதுரை மேலமாசி வீதியில் உள்ள வட இந்தியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது செல்லூர் ராஜூவுக்கு பாசி மாலைகள் அணிவித்தும் டர்பன் (சாபா) தலைப்பாகை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது செல்லூர் ராஜு கெட்டப் தாதா மாதிரி இருக்கா? என்றார். அதோடு கிண்டலடித்து போட்டிறாதீங்கப்பா என்று கலகலப்பாக பேசினார். அவருடன் வட இந்தியர்கள் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "அதிமுக திமுக தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துவிட்டன என அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு, அமித்ஷா எதையாவது பேசுவார். திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது. திராவிட இயக்க திட்டங்களையே மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. எல்லா மாநிலங்களையும் விட தமிழகமே எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளது. குஜராத் உபி போன்ற மாநிலங்களுக்கே தமிழகத்தின் நிதியை தான் கொடுக்கிறார்கள். தமிழக நிதியை தான் வடமாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கிறார்கள். தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் அப்படி பேசுகிறார்கள்.
அண்ணாமலை பேச்சல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. அண்ணாமலை என்ன ஜோசியரா? அவர் என்ன விசுவாமித்திரரா? அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை போல. எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்துள்ள இயக்கம் அதிமுக. அண்ணாமலை ஒரு நகைச்சுவையாளராக மாறிவிட்டார். தோல்வி பயத்தில் ஏதேதோ பேசி வருகிறார். அண்ணாமலை பேசட்டும். இன்னும் எத்தனை நாளுக்கு அப்படி பேசுவார் என பார்ப்போம். அண்ணாமலையை ஏற்கனவே கிழி கிழினு கிழித்துவிட்டேன். இனி அண்ணாமலையை பற்றி பேச ஒன்றும் இல்லை.
ரோடு ஷோ நடத்துவதற்கு பாரதப்பிரதமரை அழைத்து வந்து அவரே வருத்தத்தில் உள்ளார். தமிழகத்திலேயே அதிகம் கூட்டம் கூடும் பாண்டிபஜாரில் ரோடு ஷோ நடத்தியும் அமித்ஷா பேரணிக்கு ஆள் இல்லை. தேநீர் கடையில் நின்றவர்கள் கூட அமித்ஷா கை அசைத்ததற்கு பதிலுக்கு கை அசைக்கவில்லை" என்று கூறினார்.
தமிழகத்தில் திமுக அதிமுக ஊழல் செய்தனர் என அமித்ஷா பேசியது குறித்த கேள்விக்கு, "இங்கே நடந்ததை காட்டிலும் அங்கே நிறைய நடந்துள்ளது. திமுக தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி. எனவே அமித்ஷா ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிளை பற்றி பேசுவது அண்ணாமலையின் மறுவடிவமாக பேசுகிறார்.
இன்று பரப்புரைக்கு செல்லும் அமைச்சர்கள், முதலமைச்சர், உதயநிதியை பொதுமக்கள் எதிர்த்து கேள்வி கேட்கின்றனர். பரப்புரைக்கே செல்ல முடியாமல் உள்ளனர். அமித்ஷா திமுகவை பேச வேண்டியதை மொத்தமாக மாற்றி பேசி உள்ளார் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு.