நான் ஜெயிப்பதற்காக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதா திமுக..? -சீமான் விமர்சனமும்.. அண்ணாமலையின் பதிலும்..
கோவையில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக சீமான் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுராங்கத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாஜகவை எதிர்க்கிறோம், மோடியை வரவிடக் கூடாது எனக் கூறிக்கொண்டு, கோயம்புத்தூரில் அண்ணாமலையை தோற்கடிக்க திமுக வேலையே செய்யவில்லை எனக் கூறினார்.
மேலும், தூத்துக்குடியில் கனிமொழிக்காக தமாகவுக்கு சீட் கொடுத்து பாஜக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் அண்ணாமலைக்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளது என விமர்சித்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை கூறியதாவது, "முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கோயம்புத்துரிலேயே உட்கார்ந்துருக்காரு. நாளை முதல் உதயநிதி ஸ்டாலின் வந்து ரெண்டு நாள் இங்கே உட்காரப் போறாரு. தமிழ்நாட்டின் உளவுத் துறை அமைப்புகள் அனைத்தும் இங்குதான் இருக்கின்றன. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை திமுக கொடுத்து வருகிறது. சில ஊரில் 500 ரூபாயும், சில ஊரில் 1000 ரூபாயும் கொடுத்துருக்காங்க. பணபலத்தை வைத்து ஜெயிப்போம்னு திமுக நினைக்கிறாங்க. என்னை ஜெயிக்க வைப்பதற்காகவா இத்தனை வேலைகளையும் திமுக செஞ்சிட்டு இருக்கு?" என அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.