அண்ணா பல்கலை தேர்வுக் கட்டணம் 50% உயர்வு..!! மாணவர்கள் ஷாக்..
அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத்தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆண்டுதோறும் கட்டணம் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் – மே மாதத்திலும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், அண்ணாபல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இரண்டு சுற்றுகளின் முடிவில், 39.39 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளது. 69,147 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று முடிவில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 40 கல்லூரிகளில் 90% இடங்களும், 29 கல்லூரிகளில் 75% இடங்களும் நிரம்பிவிட்டன. 2வது சுற்று முடிவில், 197 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களும், 58 கல்லூரிகளில் 1%க்கும் குறைவான இடங்களும் நிரம்பியுள்ளன, 30 கல்லூரிகளில் எந்த இடமும் நிரப்பப்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலும் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை அதிகம் தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு ரூ.450ல் இருந்து ரூ.670 ஆக உயர்கிறது. புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் – டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
Read more ; கொல்கத்தா அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!! அப்போ மும்பை டீம்? வெளியான தகவல்..!!