For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் கட் அவுட்டில் இடம்பெற்ற அஞ்சலை அம்மாள்..!! யார் இவர்..? பின்னணி இதோ..!!

Statues of freedom struggle martyrs Velunachiar and Anjalai Ammal from Cuddalore district are kept.
02:45 PM Oct 25, 2024 IST | Chella
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் கட் அவுட்டில் இடம்பெற்ற அஞ்சலை அம்மாள்     யார் இவர்    பின்னணி இதோ
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாடு அமைக்கும் பணி 90% நிறைவு பெற்றது. இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளது. மாநாட்டிற்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில், மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மாநாட்டுத் திடலின் மேடை அருகே பெரியார், காமராசர், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலுநாச்சியார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட படங்ககள் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

யார் இந்த அஞ்சலை அம்மாள்..?

கடலூரில் 1890 ஜூன் 1ஆம் தேதி அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் அஞ்சலை அம்மாள். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்த முருகப்பா என்பவரை கடந்த 1908ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற அஞ்சலை, பின்னர் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொண்டார். இதனால் இயல்பிலேயே விடுதலை வேட்கை அவரது மனதில் குடிக்கொண்டிருந்தது.

பின்னர், சென்னைக்கு இடம் மாறிய முருகப்பா - அஞ்சலை தம்பதி, தங்களின் சொத்துகளை விற்று விடுதலை போராட்டத்தில் பங்கேற்றனர். 1921இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தென்னிந்தியாவில் பங்கேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் அஞ்சலை அம்மாள். 1927ஆம் ஆண்டு நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு, சிலையை உடைத்ததாக கைதான அவருக்கு ஆங்கிலேய அரசு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதே ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு வந்த காந்தி, அஞ்சலையின் மூத்த மகள் அம்மாக்கண்ணுவை, லீலாவதி என பெயர் மாற்றி தன்னுடன் குஜராத் அழைத்துச் சென்றார்.

1931இல் கடலூரில் நடைபெற்ற உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்ற அஞ்சலை கடுமையாக தாக்கப்பட்டு, 6 மாதம் சிறை வாசம் அனுபவித்தார். அப்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள், சிறையில் இருந்து வெளியே வந்து குழந்தை பிறந்த பின், 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்று தன்னுடைய தண்டனையை நிறைவு செய்தார். 1931இல் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை வகித்தார். 1934இல் தமிழ்நாடு வந்த மகாத்மா காந்தி, அஞ்சலையை சந்திக்க விரும்பினார்.

ஆனால் அதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும், பர்தா அணிந்து வந்து காந்தியை சந்தித்தார் அஞ்சலை. அவரது நெஞ்சுரத்தை பாராட்டி, அவரை தென்னிந்தியாவின் ஜான்சிராணி என புகழாரம் சூட்டினார் காந்தி. 1937, 1946, 1952 என 3 முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவிக்காலத்தின் போது, தீர்த்தம்பாளையம் குடிநீர் பிரச்சனையை தீர்க்க, வீராணம் கால்வாயில் இருந்து கிளை வாய்க்கால் வெட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்தார். நாடு விடுதலை அடைந்த போது, அரசு வழங்கிய தியாகிகள் ஓய்வூதியத்தை வேண்டாம் என மறுத்துவிட்டார்.

தனது இறுதிகாலத்தில் முட்லூர் கிராமத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டு வந்த அஞ்சலை அம்மாள், 1961ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி காலமானார். அவரது பேரன் எழிலன் நாகநாதன் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மீண்டும் தந்தையானார் டி.இமான்..!! ஆனால் இது மனைவிக்கு பிறந்த குழந்தை அல்ல..!! குவியும் பாராட்டு..!!

Tags :
Advertisement