கனமழையால் கதிகலங்கிய ஆந்திரா, தெலங்கானா..!! ரூ.1 கோடியை தூக்கிக் கொடுத்த ஜூனியர் என்டிஆர்..!!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கனமழையால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 62,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
விஜயவாடா, மொகல்ராஜபுரம், சுண்ணாம்பு மலையில் பலத்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தது. மேலும், ஆந்திரா-தெலங்கானாவில் பல இடங்களில் தண்டவாளங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, தனது சமுக வலைதள பக்கத்தில், ”அண்மையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்த கனமழையால் இரண்டு மாநிலங்களில் மிகவும் பாதித்துள்ளது. இந்த துயரத்தில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.