இன்று காங்கிரஸ் கட்சியில் இணையும் ஆந்திரா முதல்வர் தங்கை Y.S.ஷர்மிளா...!
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் உள்ளார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாக இருந்து வந்தது . அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தார் ஷர்மிளா. அவரை காங்கிரசில் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே சர்மிளாவின் மகனுக்கு இன்னும் சில வாரங்களில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்திற்கு சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை அழைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
நேற்று காலை அவர் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதனிடையே காங்கிரசில் இணைய உள்ள சர்மிளாவுக்கு, விரைவில் ராஜ்யசபா சீட் வழங்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்மிளாவுடன் காங்கிரசில் இணைய உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.