சாக்லேட் பிரியர்களே ஜாக்கிரதை: 20 சதவீதம் வரை விலை உயர்வு..! கோகோ விலை 250 ரூபாயில் இருந்து 800 ஆக உயர்வு..!
கோகோ விலை உயர்ந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் அதன் சாக்லேட் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த பரிசீலித்து வருகிறது.
சாக்லேட்கள், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற விருப்ப உணவுகளில் கோகோ முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இருப்பினும், சமீபகாலமாக அதன் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கோகோ விலையில் ஏற்பட்ட இந்த ஏற்றம் இப்போது சாக்லேட் விலையிலும் பரவலான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, அமுல், பாஸ்கின் ராபின்ஸ் மற்றும் ஹவ்மோர் போன்ற பிரபலமான பிராண்டுகள் கோகோ விலை ஏற்றத்தால் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள அமுல் அதன் சாக்லேட் விலையை 10% முதல் 20% வரை உயர்த்த பரிசீலித்து வருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா, "இந்தியாவில் ஒரு கிலோ கோகோ பீன்ஸின் விலை 250 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்த விலை உயர்வு சாக்லேட் உற்பத்தியாளர்கள் மீது அழுத்தத்தை உருவாக்குகிறது என்றார். இந்த விலை உயர்வு சுமார் இரண்டு மாதங்களில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல அமெரிக்க ஐஸ்கிரீம் பிராண்டான பாஸ்கின் ராபின்ஸ், அதன் விலைகளை மாற்றாமல் வைத்திருக்கவும் பரிசீலித்து வருகிறது. கிராவிஸ் ஃபுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் கட்டார், பல கோகோ அடிப்படையிலான பொருட்களின் விலைகள் முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது 70-80% வரை உயர்ந்துள்ளன என்று குறிப்பிட்டார்.
ஹவ்மோர் ஐஸ்கிரீம், இந்த ஆண்டு தொடக்கத்தில் பணவீக்கத்தைப் பொருத்து விலையை சற்று உயர்த்தியது, அதன் தற்போதைய விலையை மாற்றாமல் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதன் நிர்வாக இயக்குனர் கோமல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.