எண்ணூர் அமோனியா வாயு கசிவு!… தொழிற்சாலையை மூட உத்தரவு!… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
சென்னை எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உர உற்பத்தி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. காரணம் கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. மழை வெள்ளத்தின் போது இந்த ஆலையிலிருந்த எண்ணெய் கழிவுகள் மழை நீருடன் கலந்து வெளியேறியுள்ளது. இதனால் எண்ணூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை எண்ணூர் பகுதியில் இயங்கிவரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் உர உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக அப்பகுதி முழுவதும் நேற்று நள்ளிரவு அமோனியா வாயு காற்றில் கலந்துள்ளது. இந்த அமோனியா வாயுவை சுவாசித்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இங்கு விவசாயம் உள்ளிட்ட சேவைகளுக்கு உரங்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலையில், உரங்களை தயாரிப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது.
தனியார் தொழிற்சாலையிலிருந்து கடலுக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பே வாயு கசிவுக்கு காரணம். வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஈடுபட்டது. இதையடுத்து, எண்ணூரின் சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதியில் ஏற்பட்டிருந்த மிதமான வாயு கசிவு சரிசெய்யப்பட்டது.
ஆலை வாசலில் 400 மைக்ரோகிராம்/எம்3 அளவில் இருக்க வேண்டிய அமோனியா 2090 அளவுக்கு இருந்துள்ளது (5.25 மடங்கு அதிகம்). தமிழக கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே அமோனியா வாயு குழாயை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளது. மேலும், கோரமண்டல் உரத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான, நோட்டீஸ் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் அந்த தொழிற்சாலையின் வாயிலில் உள்ள கதவில் ஓட்டப்பட்டுள்ளது.