வயநாடு நிலச்சரிவு குறித்து பொய் செய்தியை தெரிவித்த அமித் ஷா... நடவடிக்கை எடுக்க நோட்டீஸ்...!
வயநாடு நிலச்சரிவு குறித்து தவறான தகவல் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவையில் கொறடா ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கியுள்ளார்.
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரளஅரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்; இந்தப் பேரிடர் ஏற்படுவதற்கு 7 நாட்கள் முன்னதாக ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை செய்ததாகவும், இதன் பின் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் முன்னெச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்யக்கூடும் என்றும், இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜூலை 26 அன்று கேரள அரசுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயன்படுத்தியதன் மூலம், பல மாநில அரசுகள் உயிரிழப்பு இல்லாத அல்லது ஓரளவு உயிரிப்பு ஏற்பட்டது பற்றி தகவல் தெரிவித்ததாக அமித் ஷா கூறினார். ஒடிசா, குஜராத் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டார். 7 நாட்களுக்கு முன்பாகவே, ஒடிசா அரசுக்கு புயல் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டதையடுத்து அங்கு ஒரே ஒரு உயிரிழப்பு மட்டும் ஏற்பட்டது என்றும், குஜராத் மாநிலத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட போது ஒரு கால்நடைக்கு கூட சேதம் ஏற்படவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு குறித்து தவறான தகவல் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவையில் கொறடா ஜெய்ராம் ரமேஷ் உரிமைமீறல் நோட்டிஸ் வழங்கியுள்ளார். கேரளாவுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொய்யான தகவலை தெரிவித்து அவையை தவறாக வழிநடத்தி அவையின் கன்னியத்தையே களங்கப்படுத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.