கோடி பேரில் ஒரு பிரசவம்… இரண்டு கர்ப்பப்பைகளிலும் குழந்தைகள்… மருத்துவ உலகின் ஆச்சரியம்.!
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு கர்ப்பப்பைகளிலும் குழந்தை உருவாகி இருக்கும் சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது. இது மருத்துவ உலகில் அரிதான சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒரு பெண்ணுக்கு இரண்டு கர்ப்பபைகள் இருப்பதை யூடிரஸ் டிடெல்பிஸ் என்று மருத்துவத்தில் அழைப்பார்கள். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதான கெல்சீ ஹேட்சர் என்ற பெண்ணுக்குத்தான் இந்த அரிதான இரண்டு கர்ப்பப்பைகள் இருக்கின்றன. தற்போது இவருக்கு இரண்டு கர்ப்ப பைகளிலும் குழந்தைகள் உருவாகியிருக்கிறது. இது தொடர்பாக தனது கணவரிடம் தெரிவித்த போது அவர் இதனை நம்பவில்லை என தெரிவித்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவரது பிரசவத்தில் இருக்கும் சிக்கல்களை மருத்துவர்கள் அறிந்துள்ளனர். இரண்டு கர்ப்ப பைகளிலும் குழந்தை இருக்கும் போது ஒவ்வொரு கர்ப்பபைக்கும் வெவ்வேறான நேரங்களில் பிரசவ வலி ஏற்படலாம். ஒரு குழந்தை பிறந்து சில மணி நேரம் அல்லது சில நாட்கள் கழித்து கூட இன்னொரு குழந்தை பிறக்கலாம். இதுபோன்று பல சிக்கல்கள் இந்த பிரசவத்தில் இருப்பதாக அலபாமா பல்கலைக்கழகம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது சிசேரியன் என்றால் இன்னும் பிரச்சனை தான் எனவும் தெரிவித்திருக்கின்றனர். சிசேரியன் போது இரண்டு கர்ப்பப்பைகளையும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்கும் என்றும் இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் இந்த அதிசய குழந்தைகளின் தாய் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.