தவெகவுடன் கூட்டணியா..? நாங்க எப்போ சொன்னோம்..? அதிமுக தலைவர்கள் பரபரப்பு கருத்து..!!
அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான தகவலுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்திருந்த நிலையில், அதுதொடர்பாக அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “தவெக முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து தமது உரையில் கட்சித் தலைவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இந்த சூழலில் 2026 தேர்தலில் அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அதிமுகவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது முற்றிலும் தவறான செய்தி. விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக நாங்கள் எப்போது அறிவித்தோம்..? கூட்டணியை இறுதி செய்ய இன்னமும் காலம் இருக்கிறது. கூட்டணி குறித்த முடிவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய காலத்தில் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "2026 சட்டமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அருமையான கூட்டணி, வெல்லப்போகும் கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமையும். கூட்டணி குறித்த முடிவுக்காக பொதுச்செயலாளர் சரியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
Read More : பெண்களே..!! மகளிர் உரிமைத்தொகையை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம்..!! தமிழ்மகள் திட்டம் பற்றி தெரியுமா..?