அண்ணாமலையின் "ஆவின் பால்" குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கூறிய பதில் என்ன..?
ஆவின் பால் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கைக்கு தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார். மேலும் ஏதாவது அறிக்கைகளை வெளியிட்டு ஆட்சியாளர்களின் நடவடிக்கையும் குறை கூறி வருகிறார். இந்நிலையில் ஆவின் பாலில் கொழுப்புச்சத்து குறைக்கப்பட்டு இருப்பதாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் அண்ணாமலையின் புகார் குறித்து பதிவிட்டு இருக்கும் அவர் ஆவின் பாலில் கொழுப்புச்சத்து குறைக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டி இருப்பது போன்று பெட் பாட்டில்களில் ஆவின் பால் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். ஆவின் பால் எப்போதுமே பிரத்தியேக பாக்கெட்டுகளில் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது எனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து தொடர்ந்து பதிவு செய்திருக்கும் அவர் அரசியலுக்காகவும் வெளி மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் வழங்கும் ஆதாயத்திற்காகவும் அண்ணாமலை போன்றவர்கள் இதுபோன்று குறைகளை சொல்லி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆவின் பாலின் தரம் எப்போதும் ஒரே அளவில் தான் இருக்கிறது. அதன் தரத்தில் எந்த குறையும் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.