இனி முன்பதிவு செய்த அனைவருக்குமே டிக்கெட் கிடைக்கும்..!! ரயில்வே நிர்வாகம் மாஸ் திட்டம்..!!
ரயில் பயணிகள் அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும் வகையில் மெகா பிளான் ஒன்றை முன்னெடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
இந்தியாவின் போக்குவரத்துத் துறையில் முதுகெலும்பாக இருப்பது ரயில்வேதான். தொலை தூர பயணம் முதல் குறுகிய தொலைவு செல்ல வேண்டும் என்றால் கூட ரயில் வசதி இருந்தால் முதலில் ரயிலில் செல்வதற்கு தான் பயணிகள் விரும்புவார்கள். இதனால், ரயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. டிக்கெட் புக்கிங் தொடங்கிய மறு நிமிடமே அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் காலியாகிவிடும். அதேபோல், தட்கல் முன்பதிவிலும் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.
இந்நிலையில், தான் வரும் 2027-க்குள் ரயில் பயணிகள் அனைவருக்கும் கன்பார்ம் டிக்கெட்டுகள் கிடைக்கும் வகையில் மெகா பிளானை முன்னெடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். இது தொடர்பாக பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, மெகா ரயில்வே விரிவாக்க திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும் புதிய ரயில்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ரயில்வே நெட்வொர் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு இந்திய ரயில்வேயில் 10,748 ரயில்கள் ஓடுகின்றன. ஒவ்வொரு நாளும் ஓடும் ரயில்களின் எண்ணிக்கையை 13 ஆயிரமாக அதிகரிக்கவும் ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அடுத்த 3 - 4 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே வைத்து இருப்பதாகவும் கூறப்படுகின்றன.
இந்திய ரயில்வேயை ஒவ்வொரு ஆண்டும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 800 கோடி ஆகும். இதனை ஆயிரம் கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதேபோல் பயண நேரத்தை குறைக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. புதிய வழித்தடங்கள் அமைப்பது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.