நாட்டு மக்கள் அனைவரும் சிறுபான்மையினராக மாறிவிடுவர்!. மதமாற்ற கூட்டங்களை நிறுத்துங்கள்!. கோர்ட் எச்சரிக்கை!
Court: மதமாற்றம் நடக்கும் மதக்கூட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவர்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஹாமிர்புர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ராம்காளி பிரஜாபதி. இவரது சகோதரர் ராம்பால். மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்கள் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த கைலாஷ் என்பவர், டில்லியில் நடக்கும் மதக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றால், பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என, கிராம மக்களிடம் கூறியுள்ளார்.
ராம்பாலின் மனநல பிரச்னையையும் குணப்படுத்துவதாக ராம்காளியிடம் கூறினார். இதை நம்பி, கைலாஷுடன் ராம்பாலை அனுப்பி வைத்துள்ளார். கிராம மக்கள் சிலரும் சென்றனர். டெல்லியில் நடந்த மதக்கூட்டத்துக்கு சென்ற கிராம மக்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு ஊர் திரும்பினர். ஆனால், ராம்காளியின் சகோதரர் மட்டும் திரும்பவில்லை. இது குறித்து கைலாஷிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைலாஷை கைது செய்தனர். அவர் ஜாமின் கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் பிறப்பித்த உத்தரவு, மதப்பிரசாரம் என்பது அந்த மதத்தை பற்றிய கருத்துகளை பரப்புவது தானே தவிர, ஒருவரை அவரது சொந்த மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாற்றுவது அல்ல.
இது போன்ற பல்வேறு வழக்குகளை இந்த நீதிமன்றம் எதிர்கொண்டு வருகிறது. எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுகின்றனர். உ.பி., முழுதும் இந்த போக்கை காண முடிகிறது. இது போன்ற மத கூட்டங்கள் நடப்பதை உடனடியாக நிறுத்தவில்லை எனில், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள் ஒரு நாள், சிறுபான்மையினராக மாறிவிடுவர்.
டில்லியில் நடந்த மதக்கூட்டத்துக்கு கிராம மக்களை அழைத்து சென்ற கைலாஷ், அவர்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றியுள்ளார் என்பதை விசாரணை அதிகாரி தெளிவாக பதிவு செய்துள்ளார். எனவே, குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதால் மனுதாரரின் ஜாமினை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.