TN FISHERMEN| "அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை" தமிழகத்தில் மீனவர்களுக்கு உதயமாகிறது புதிய கட்சி.!
TN FISHERMEN: தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு புதிய கட்சியை தொடங்க இருப்பதாக அனைத்து மீனவர் சங்கங்களின் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார் .
தமிழக மீனவர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சுட்டுக் கொல்லப்படுவதும் கைது செய்யப்படுவதும் நடந்து வருகிறது. மேலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதிலும் தாமதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் மீனவர்கள் தங்களுக்கு என தனி அரசியல் கட்சி உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பேசிய அனைத்து மீனவர் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களையும் ஒருங்கிணைத்து கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருக்கும் 610 மீனவ கிராமங்களையும் ஒரே தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து மீனவர்களின் நலன்களுக்கு என தனி கட்சி அமைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள மீனவ கிராமங்களை ஒரே தலைமையில் ஒருங்கிணைப்போம் எனவும் தெரிவித்திருக்கிறார். இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மீனவர்களை காக்க தவறிவிட்டதாக தெரிவித்த அவர் எங்களது நலன்கள் மற்றும் உரிமையை காக்க நாங்களே கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இனி அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை எனவும் கூறினார்.