விட்டாச்சு லீவ்...! இன்று எங்கெங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 4 மாவட்டங்களிலும் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சக்தி கார்டன் பகுதியில் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து அப்பகுதி மக்களை தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் மின்சாரமானது துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதே போல விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.