அனைத்து ரேஷன் அட்டைகளும் பொங்கல் பரிசு தொகுப்பு...! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை...!
ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொங்கல் பண்டியை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதையை திமுக ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 5-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லாத அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல்பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுநிலைக்கு எதிரான செயலாகும்.
எல்லா திட்டங்களுக்கும் நிபந்தனைகளை விதித்து பயனாளிகள்எண்ணிக்கையை குறைப்பதுபோல, பொங்கல் பரிசு வழங்குவதிலும், நிபந்தனைகளை விதித்து பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது மக்களிடையை பாரபட்சத்தை ஏற்படுத்துவதுபோல உள்ளது.
இருக்கின்ற சலுகைகளை பறிக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எனவே, ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.