தமிழகத்தில் 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை தொடரும்...! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு...!
5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி ரத்து நடைமுறை தமிழகத்திற்கு பொருந்தாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஆண்டு கொண்டு வந்த திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள்.
மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது. இந்த புதிய விதியானது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டாயத் தேர்ச்சி ரத்து நடைமுறை தமிழகத்திற்கு பொருந்தாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கட்டாயத் தேர்ச்சி கொள்கை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் அமலாகுமா என கேள்வி எழுந்தது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுத்துள்ளார். 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும் என தெரிவித்துள்ளார்.