வங்கதேச விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது...!
வங்கதேச விவகாரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை இன்று காலை 10 மணிக்கு கூடியது.
கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி பல்வேறு பிரிவினருக்கு 56% இடஒதுக்கீடும், பொது பிரிவினருக்கு 44% இடஒதுக்கீடும் அமலில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கை கடந்த ஜூலை 21-ம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தது. சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு 2 சதவீத ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி, அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. எஞ்சிய 93 சதவீதம் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.
இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய 6 பேரை போலீஸார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், மாணவர் சங்கமூத்த தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜும்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது. பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் டாக்கா உட்பட நாடுமுழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீஸாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நாட்டுப் பிரதமர் தனி விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். வங்கதேச விவகாரம் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை இன்று காலை 10 மணிக்கு கூடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் கூட்டத்தில் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்க உள்ளார்.