’எல்லா தொழிலுக்கும் வேலை முடிந்தவுடன் ஊதியம்’..!! ’எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி’..? நாளை மாபெரும் மாநாடு..!!
கூலி தொழிலாளர்கள் தொழிலை, அமைப்புசாரா பட்டியலில் இணைக்க இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கூலி நிலத்தரகர்கள் தொழிலுக்கு அங்கீகாரம் கேட்டு பல காலமாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் தான் நிலத்தரகர்கள்.
கூலி நிலத்தரகர் தொழிலாளர்களுக்கு கமிஷன் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலாளர்களால் அரசுக்கும் வருமானம் வருகிறது. வேறு தொழிலாளர்கள் அமைப்பிற்கு அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. அதேபோல், ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அங்கீகாரம் கொடுத்து அமைப்பு சாரா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின் 20ஆம் ஆண்டு விழா திருப்பூரில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நிலத்தரகர் தொழில் செய்யும் தொழிலாளர்கள் நலன் காக்க அவர்கள் பெற வேண்டிய நிலத்தரகர் கமிஷன் தொகையை சுமூகமாக பெற்றிட கடந்த 24.10.2004 அன்று தமிழ் திருநாடு நிலம், வீடு மனை தரகர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் விருகம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் பாலமாக இருந்து நிலத்தரகு தொழிலாளர்கள் செயல்படுகிறார்கள்.
எல்லா தொழிலுக்கும் வேலை முடித்தால் உடனே ஊதியம் தரப்படுகிறது. ஆனால், நிலத்தரகர் தொழில் செய்யும் கூலி நிலத்தரகர்களுக்கு எப்பொழுது ஊதியம் வரும் என்ற நிலையான கால அவகாசமே இல்லை. ஆண்டுதோறும் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எங்களது ஒரே நோக்கம் கூலி தொழிலாளர்கள் தொழிலை அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி வருகிறோம்.
வருகிற டிசம்பர் 3ஆம் தேதி திருப்பூரில் நமது சங்கத்தின் சார்பாக 20ஆம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர் பெருமக்கள் பல அரசியல் தலைவர்கள் பல சங்கத்தின் தோழர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கூலி நிலத்தரகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" தெரிவித்துள்ளார்.