'அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்'!. ரஷ்யாவில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பலியானதையடுத்து அதிரடி!. வெளியுறவுத்துறை அமைச்சகம்!
Ministry of External Affairs: ரஷ்யா-உக்ரைன் போரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, ரஷ்ய ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவித்து, திருப்பி அனுப்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பினில் டிபி(32), அவரது உறவினர் ஜெயின் டிகே (27) ஆகிய இருவரும், ஐடிஐ மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்த நிலையில், வேலை வாய்ப்புக்காக ஏப்., 4ல் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த நாட்டை அடைந்தவுடன் இந்திய பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விரும்பிய பணிகளை தொடர அனுமதிக்கப்படுவதற்குப் பதிலாக, எதிர்பாராத விதமாக ரஷ்ய ராணுவ ஆதரவு சேவையின் ஒரு பகுதியாக போர் மண்டலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பினில் மற்றும் ஜெயின் உக்ரைனின் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவித்தனர். அவர்களின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் பினில் உயிரிழந்த நிலையில், ஜெயின் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த பினில், உக்ரைன் - ரஷ்யா போரில் இறந்தார் என்றும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு இந்தியர் காயமடைந்து மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பான அறிக்கையில், "பினிலின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பினிலின் சடலத்தை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்த நபரை விரைவில் வெளியேற்றவும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் நாங்கள் முயன்றுள்ளோம்" என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கலந்துரையாடியபோது, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை முன்கூட்டியே வெளியேற்றுவது குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
Readmore: தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு!. 40 விவசாயிகள் சுட்டுக்கொலை!. நைஜீரியாவில் பயங்கரம்!.