அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ரேஷன் கடைக்கு வர வேண்டும்..!! இல்லையென்றால், பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்..!!
ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமுறை ரேஷன் கடைக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளதாக சில ரேஷன் கடை பணியாளர்கள் கூறி வருவதால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க தற்போது கைரேகை கட்டாயமாக உள்ளது. கைரேகை வாங்க முடியாத நிலை இருந்தால், அதாவது அவரது கைரேகையில் பிரச்சனை இருந்தால் மட்டுமே கையெழுத்து பெறப்படுகிறது. அதேநேரம் வயதானவர்கள், முடியாதவர்கள் என்றால் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு பதில் வரப்போகிறவர் குறித்து ஆதார் நகலை இணைத்து அதற்கு என்று உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்நலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கைரேகை பதிவு செய்தால் தான் பொருள் என்று கூறப்படுவதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை திருச்சி பகுதியில் உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில், ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்தலைவி ஆகிய இருவரில் ஒருவர் ரேஷன் கடைக்குச் சென்று விரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமுறை ரேஷன் கடைக்கு வந்து ரேகைகளை பதிவு செய்தால் செய்ய வேண்டுமென உத்தரவு வந்துள்ளதாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், வழக்கம்போல் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குடும்பத்தலைவர் வெளியூர் அல்லது வெளிமாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலையில், மீண்டும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்துதான் வீட்டிற்கு வரும் நிலை உள்ளது.
அதேபோல தங்களுடைய மகன் அல்லது மகள் வெளியூரில் பள்ளி மற்றும் கல்லூரியில் தங்கி படிக்கின்றனர். அவர்கள் எப்போதாவது ஒருமுறை வரும் நிலையில், எப்படி இங்கு வந்து தங்களுடைய ரேகைகளை பதிவு செய்ய முடியும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ரேஷன் கடையில் அடிக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ரேஷன் பொருட்களையே நம்பி வாழும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதனால் அவதிப்படுவதாகவும், எனவே இதுபோன்ற உத்தரவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.