தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை மணி!… முன்னாள் அமைச்சர் பகீர் பதிவு!
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது வெறும் செய்தி அல்ல, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டியதற்கான 'எச்சரிக்கை மணி' என்றுபதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜயபாஸ்கர், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 பேர் கேரளா, 2 பேர் கர்நாடகா, தமிழகத்தில் ஒருவர் அடங்குவர். இது வெறும் செய்தி அல்ல, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டியதற்கான 'எச்சரிக்கை மணி' என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு மாநில எல்லைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி இருப்பதால் விமான நிலையங்கள், இரயில் நிலையங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல், உருமாறிய JN1 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்படுபவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் தொடர்ந்து கண்காணித்திட மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். மிகமுக்கியமாக, "பொதுமக்களுக்கு முறையான, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து", மக்களை எவ்வித அச்சமும் இல்லாமல் வைத்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.