ADMK: புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக!… இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!… எடப்பாடியின் திட்டம் என்ன?
ADMK: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ ரவீந்திரநாத் தேனி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார். சென்னை பொதுவாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாத போதுகூட திமுகவுக்கு கணிசமான எம்.எல்.ஏக்களை கொண்டு கை கொடுத்தது சென்னை.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் போலவே இந்த ஆண்டும் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் திமுகவே நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக வட சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் போட்டியிடுகிறது, மத்திய சென்னை கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கோவை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதியில் அதிமுக சார்பாக, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கோவை சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜ்-ன் மகன் ஆவார். கட்சியின் தகவல் தொழில்நுட்பச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.
அவரது மறைவுக்குப் பின் ஒ.பி.எஸ்-க்கு ஆதரவு அளித்து வந்தார். இவருக்கு எதிராக களத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவையின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிமுக முன்னாள் மேயரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரும் ஆவார். அந்தவகையில் இந்த தேர்தலில் புதுமுகங்களை நம்பி களமிறங்கியுள்ளது அதிமுக.
இந்தநிலையில், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 27ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உடனடியாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி, களத்தில் இறங்கிச் செயல்படுவது பற்றி மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாக தெரிகிறது.
Readmore: Special Bus: இன்று முதல் 24-ம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து…! முழு விவரம் இதோ…