For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2026-ல் அதிமுக ஆட்சி… உட்பகை கொண்டவர்கள் இனி தேவையில்லை… தியாகம் செய்ய நான் இருக்கிறேன் -எடப்பாடி பழனிசாமி…

AIADMK rule in 2026... Enmity people are no longer needed... I am here to sacrifice - Edappadi Palaniswami...
01:41 PM Oct 15, 2024 IST | Kathir
2026 ல் அதிமுக ஆட்சி… உட்பகை கொண்டவர்கள் இனி தேவையில்லை… தியாகம் செய்ய நான் இருக்கிறேன்  எடப்பாடி பழனிசாமி…
Advertisement

அதிமுகா கட்சி 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, "இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு தேவையில்லை என்று உறுதியோடு இருப்போம் எனவும், நமது தோட்டத்தில் கலைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் முழு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா எனும் கழகத்தின் இருபெரும் தலைவர்களின் அன்புத் தொண்டர்களாம் எனதருமைக் கழக உடன்பிறப்புகளே வணக்கம். காரிருள் சூழ்ந்து காட்டாட்சி நடைபெற்ற நேரத்தில், தமிழ் நாட்டு மக்களை மீட்டெடுக்கத் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.

நம்முடைய கழகம் தோன்றிய காலகட்டத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலையும், கழகம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் நினைத்துப் பார்க்கிறேன். இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இருண்ட கால ஆட்சிதான் அப்போதும், 1972-லும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது; வறட்சியும், பஞ்சமும் பல மாவட்டங்களில் ஏற்பட்டு, அதனால் தமிழக மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் தங்கள் ஊர்களில் இருந்து கூலி வேலைக்கு இடம்பெயரத் தொடங்கினார்கள்; விலைவாசி ஏற்றம், பொருளாதார பாதிப்பு, தொழிலாளர்கள் போராட்டம் என்று அனைத்து வகையிலும் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர்.

திரு. கருணாநிதியின் அடக்குமுறையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இன்னொருபுறம் கழகத்தின் உணர்வுப்பூர்வமான தொண்டர் வத்தலகுண்டு ஆறுமுகம் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் திமுக-வினரின் அராஜகத்திற்கு பலியாயினர். 1976-ஆம் ஆண்டு வரையிலான கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் சிறைக் கொடுமை அனுபவித்து, கண்களை, கால்களை இழந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டால் நம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருக்கும்.
கழகத்திற்காக பாடுபட்ட தியாகசீலர்களை எல்லாம் இந்த நாளில் நன்றியோடு நினைவுகூர்வது எனது கடமையெனக் கருதுகிறேன்.

பேரறிஞர் அண்ணாவின் கனவு சிதைக்கப்பட்டு, ஆங்காங்கே ஆளும் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, அவர்களது குடும்பங்கள் சிற்றரசர்களாக கோலோச்சி, மக்களை வாட்டி வதைக்கும் கொடுமைகளுக்கு ஒரு முடிவில்லையா? என்று தன் உரிமைக் குரலை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களுக்காக உயர்த்தத் தொடங்கிய காலகட்டம் அது. அத்தருணத்தில், கருணாநிதியின் குடும்ப ஆட்சியின் கோரத் தாண்டவத்தைப் பற்றியும், ஊழல் மலிந்த நிர்வாக சீர்கேட்டைப் பற்றியும், பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திமுக-வின் வரவு செலவுகளுக்கு முறையான கணக்கு விபரங்களையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்கத் தொடங்கினார்.

மக்களின் மனசாட்சியாக விளங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவரது ரசிகர்களை கொடூரமாக தாக்கத் தொடங்கினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைத்து உருவாக்கிய கட்சியில் இருந்து அவரை தூக்கி எறிந்தனர் துரோகிகள். அதைக் கண்டு மனம் சகிக்காது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மீதுள்ள விசுவாசத்தால் என்னைப் போன்ற இலட்சக்கணக்கான தமிழ் நாட்டு இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்தார்கள். எத்தனையோ கொடுமைகளை எதிர்கொண்டார்கள். அவற்றில் சைக்கிள் செயின் போன்ற புதிய ஆயுதத்தைத் கொண்டு புரட்சித் தலைவரின் ரசிகர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள்.

“புதிய இயக்கம் காணுங்கள், புதியதோர் உலகம் படைத்திட வாருங்கள்” என்று தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் வீதிதோறும் போராட்டக் குரல் எழுப்பி புரட்சித் தலைவருக்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர். உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்ற இளைஞர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மீதுள்ள தீவிர விசுவாசத்தால் தீக்குளித்து தனது தேகத்தையே தீயிக்கு திண்ணக்கொடுத்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்தார். விலைமதிக்க முடியாத இந்தத் தியாகத்தைக் கண்டு உலகமே வியந்து நின்றது. தலைவணங்கி போற்றியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண் கலங்கி கதறித் துடித்தார்.

இதுபோன்ற துயரங்களையும், தமிழ் நாட்டு மக்கள் படும் துன்பங்களையும் கண்டு வெகுண்டெழுந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்மீது பேரன்பு கொண்ட தமிழ் நாட்டு மக்களின் அழைப்பை ஏற்றார். அண்ணாவின் கொள்கைகளை அணையாத விளக்குகளாய் காப்பாற்றப் புறப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கினார்.

என்னைப் போன்ற அந்நாள் இளைஞர்களின் கூட்டம் சிற்றூர், பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம் என்று எங்கெங்கும் போர் முரசு கொட்டி களத்திற்கு வந்தார்கள். பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆதரவளித்த இளைஞர்களைப் பார்த்து “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள், நாளைக்குள் கருகி வாடிவிடுவார்கள்” என்று ஏளனம் பேசியவர்களுக்கு, திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற மாபெரும் வெற்றி, எதிரிகளின் நெஞ்சில் இடியென விழுந்தது.

அப்போதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர் படைகளைப் பார்த்து எதிரிகள் திகைத்துப் போனார்கள். இளைஞர் பட்டாளத்தை உலகமே திரும்பிப் பார்த்தது. புரட்சித் தலைவரை எதிர்த்தவர்கள் பின்னங்கால்கள் பிடறியில்பட தெறித்து ஓடினார்கள். "சமயம் வந்தது, தர்மம் வென்றது. நல்லது நினைத்தோம் நடந்ததையா" என்று தமிழ் நாட்டு மக்கள் புரட்சித் தலைவரை தலைமேல் வைத்து தாய்மார்களும், தமிழக மக்களும் போற்றி, பாராட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 1977, 1980, 1985 என தொடர்ந்து 3 முறை வெற்றிபெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து, ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் பல்வேறு முத்தான திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கினார்கள். ஆண்டுகள் கழிந்தன, காலங்கள் உருண்டோடியது. ஒரு நாள் புரட்சித் தலைவர் மறைவு என்னும் பெரும் துயரச் செய்தி இடியென இறங்கியது. இதயமே நின்றது. அழுத கண்ணீரோடு திகைத்து நின்றோம். என்ன செய்வதென்றே தெரியாது எங்களைப் போன்று தமிழ் நாடே திகைத்து நின்றது.

இத்தகைய துயர் மிகுந்த தருணத்தில், சுயநல சக்திகள் நம்முடைய இயக்கத்தை திட்டமிட்டு பிளவுபடுத்த எண்ணி காய்களை நகர்த்தி சூழ்ச்சிகளைச் செய்தார்கள். நம்முடைய கழகம் அத்தோடு முடிந்தது என்று ஆணவத்தால் சிரித்து மகிழ்ந்தார்கள் சிறு மதியாளர்கள். கழகத்தை விலைபேசி தம் வயிறு வளர்க்க சில துரோகிகள் புதிது புதிதாக தோன்றினார்கள். சூழ்ச்சிகளும், சதிகளும் வேலை செய்யத் தொடங்கின. தலைமைக் கழகம் மூடப்பட்டது. சோதனையான அந்த காலகட்டத்தில், கழகத்திற்கு புத்துயிரூட்டி புதுப் பொலிவு அடைய புறநானூற்றுத் தாயாக, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, வாராது வந்த மாமணியாய் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.

சிங்கமென சிலிர்த்தார்கள். துரோகிகளின் ஆணவச் சிரிப்பு அடங்கியது. எதிரிகள் கூட்டம் பதுங்கியது. தமிழகம் புதுப் பொலிவு அடையக் காத்திருந்தது. கழகம் புத்தெழுச்சி பெற்று புது வேகம் அடைந்து புத்துருவாக்கத்திற்கும், மீட்டுருவாக்கத்திற்கும் உள்ளாகி வேகம் எடுத்தது. கழக உடன்பிறப்புக்கள் எழுச்சியோடு பீடுநடை போட்டார்கள். எதிரிகள் எங்கோ ஓடி மறைந்தார்கள். புரட்சித் தலைவிக்கு துணையாக லட்சக்கணக்கான தொண்டர்கள் பின் தொடர அவர்களில் ஒருவராக நானும், என்னைப் போன்றோர்களும் அம்மாவின் வெற்றிப் பயணத்திற்கு தோள் கொடுத்து நின்றோம். கழகம் இரண்டாகப் பிரிந்த நிலையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் சேவல் சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொண்டோம். புரட்சித் தலைவி அம்மா உள்ளிட்ட என்னைப் போன்று 27 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்து கழகத்தின் வெற்றிக்கு உழைத்தோம். சட்டமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல்களிலும் நம் அம்மாவுக்கு துணையாக நின்று எங்களை அர்ப்பணித்தோம்.

புரட்சித் தலைவி அம்மாவின் செல்வாக்கு நாளும் பொழுதும் வளரத் தொடங்கியது. ஏற்கெனவே 10 ஆண்டுகள் நடைபெற்ற புரட்சித் தலைவரின் ஆட்சியில் மகத்தான திட்டங்கள், மனிதநேய சட்டங்கள், மானுடப் பற்றோடு நாளும், பொழுதும் மக்களின் ஆட்சியாகவே மலர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று மக்கள் பேசத் தொடங்கினார்கள். அதன் பலனாக பிரிந்த கழகம் ஒன்றாக இணைந்து, இழந்த சின்னம் 'இரட்டை இலை' கிடைக்கப் பெற்று புதிய பொலிவோடு புத்தெழுச்சியோடு புரட்சித் தலைவியின் தலைமையில் 1991-ல் தமிழ் நாட்டில் மீண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி மலர்ந்தது.

நம் அம்மா அவர்களின் தலைமையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும், அம்மா அவர்களின் அருந்தொண்டனாகிய உங்கள் அன்புச் சகோதரனான எனது தலைமையில் சுமார் 4/2 ஆண்டுகளும் நாடு போற்றும் நல்லாட்சியை, மக்கள் பாராட்டும் மகத்தான ஆட்சியைத் தந்ததில் பெருமிதம் அடைகிறேன். இவ்வாறாக, கழகம் தொடங்கிய காலம் தொட்டு, மக்கள் பணியில் கண் துஞ்சாது கடமையாற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 30 ஆண்டுகால மக்கள் ஆட்சியில் மகத்தான தொண்டுகளால், மக்கள் போற்றும் சாதனைகளால் தமிழ் நாடு தலை நிமிர்ந்தது; தன்னிகரில்லாத எழுச்சி பெற்றது. இதனால், சமூக நீதி மலர்ந்தது; சமத்துவம் மலர்ந்தது; சமதர்மம் பிறந்தது; மக்கள் வாழ்வு உயர்ந்தது; தமிழகத்தில் கல்வி வளர்ந்தது; மக்களின் கவலைகள் மறைந்தன.

மற்றொரு புறம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு, புராண, இதிகாசங்களில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தந்திரங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் இணையான திரை மறைவு வேலைகளால், சூழ்ச்சிகளால், சதி வலைகளால், உடனிருந்து கொள்ளும் வியாதிகளாய் பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு கழகத்தை அழிக்கத் துடிக்கும் எட்டப்பர்கள் இந்த இயக்கத்தையே காட்டிக்கொடுத்து, அழிக்கத் துணிந்தார்கள். எத்தனையோ சூழ்ச்சிகள் நடைபெற்றன. “இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்சி நீடிக்கப்போகிறது ?” என்று ஏளனம் பேசியவர்கள் ஒருபுறம். மனசாட்சியை மறைத்துவிட்டு, கபட நாடகங்களை அரங்கேற்றினார்கள்.

ஆனால், அவர்கள் சூதுமதி பலிக்கவில்லை; சூழ்ச்சிகள் வேலை செய்யவில்லை. அவர்கள் விரித்த வலையிலே அவர்களே மாட்டிக்கொண்டதை நாடறியும். "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் சூளுரைத்து சபதம் ஏற்றார்கள். அவர்களின் சபதத்தை நிறைவேற்றி, மக்கள் பணியே மகேசன் பணி என்ற அண்ணாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏற்றி, எண்ணற்ற துரோகங்களை முறியடித்து, அம்மா விட்டுச் சென்ற ஆட்சியை சிறப்புடன் நடத்த நம் இருபெரும் தலைவர்களின் ஆசி உங்கள் பேரன்பால் எனக்கு கிடைத்தது.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும்” என்பதற்கு இணங்க அம்மாவின் ஆட்சி எனது தலைமையில் மக்களாட்சியாகவே நடந்தது. என்னுடைய அயராத முயற்சிகளுக்கும், தொய்வில்லாத பணிகளுக்கும் நாள்தோறும் துணை நிற்கும் உங்கள் ஒவ்வொருவரையும் இந்தப் பொன்னாளில் நன்றியோடு நினைக்கிறேன்; கழகத் தொண்டர்களின் அர்ப்பணிப்பை, தியாகத்தை நினைத்துப் போற்றுகிறேன்.'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது.

“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்ற வள்ளுவரின் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல் இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்குத் தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம்.

கழக உடன்பிறப்புகளே, "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற வைர வரிகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இன்னும் 112 ஆண்டுகளில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியை, புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியை மலரச் செய்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவுதர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது.

பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் கழகத்தின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். உங்களின் உயர்வுக்காகவும், கழகத்தின் வெற்றிகாகவும் என்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறேன். "விடியும் வேளை வரப்போகுது, தருமம் தீர்ப்பை தரப்போகுது" என்ற புரட்சித் தலைவரின் தத்துவ வரிகள் நமக்குள் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வெற்றி நிச்சயம்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement