சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுக MLA-க்கள் தான் காரணம்..!! - அப்பாவு
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள். கொள்கைகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். சட்டப்பேரவை தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பது வழக்கம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை வரவேற்றனர். இந்த நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் அமர்ந்திருந்த இருக்கை முன் குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது.
அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் சட்டசபை பாரம்பரியத்தின் அடிப்படையில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். ஆண்டின் முதல் கூட்டத் தொடரிலேயே ஆளுநர் சபையை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மூன்றாம் நாளான இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் வெளியேறியது குறித்த விவாதத்தில், சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுக MLA-க்கள் தான் காரணம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் அமர்ந்திருந்த இருக்கை முன் குரல் எழுப்பியதால் மட்டுமே அவர் வெளியேறினார் என அப்பாவு தெரிவித்தார். இதனால் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என சொல்லும் உரிமை ஆளுநருக்கு கிடையாது எனவும் வலியுறுத்தினார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, அதிமுக உரிமை குழு மீதான விசாரணை திரும்ப பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.