அதிமுக வேட்பாளர் பட்டியல்..!! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன முக்கிய தகவல்..!!
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே சீட் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என அமைச்சர்கள் கூறியதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, சென்னை வெள்ள பாதிப்புகளை திமுக அரசு பாடமாக எடுத்துக் கொள்ளாததால், தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. மேலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டு கொள்ளாமல் இந்தியா கூட்டணி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு தேர்தலை நோக்கமாகக் கொண்டு மக்களை உதாசீனப்படுத்தியதாகவும் அவர் விமர்சித்தார்.