ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள்..!! பயணிகள் அதிர்ச்சி
அகமதாபாத்-மும்பை டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் சூரத் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து பிரிந்து சென்ற சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
வெளியான தகவலின்படி, இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 8:50 மணியளவில் வதோதரா பிரிவில் உள்ள கோதங்கம் யார்டுக்கு அருகில் நடந்தது. ரயிலின் கப்லரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயிலின் மற்ற பகுதிகளிலிருந்து பெட்டிகள் பிரிந்தன. அதிஷ்டவசமாக ரயில் மெதுவான வேகத்தில் சென்று தண்டவாளத்தில் நின்றதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இறுதியாக ரயில் நின்றதும், பயணிகள் ரயிலில் இருந்து வேகமாக இறங்கினர்.
இச்சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பலர் ரயிலில் இருந்து வெளியேறி ரயில் பாதைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். இச்சம்பவத்தால் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. காலை 11:37 மணிக்கு, மறுசீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், மெயின் லைனில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மேற்கு ரயில்வே அறிவித்தது.
Read more ; ஒடிசாவில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு..!!