விவசாயிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்...! இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல்...!
2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய பட்ஜெட்
சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளாக; முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இத்திட்டத்துக்கு ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
மொழித் தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி. தரணியெங்கும் தமிழ், மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள், நூலகங்களில் இடம்பெற ஏற்பாடு செய்ய ரூ. 2 கோடி ஒதுக்கீடு. கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு. கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு.
பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி ஒதுக்கீடு. 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.