கொரோனா டெஸ்ட் எடுக்க அச்சம்..!! பாதிப்பு அதிகமாகலாம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. தனி மனித இடைவெளி, முகக்கவசம், ஊரடங்கு என எதற்கும் கட்டுப்படாத கொரோனா, கடைசியாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.
அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கொரோனா அதிகம் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடந்த 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, உண்மையான கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் கொரோனா பரிசோதனை எடுக்க முன்வருவது இல்லை எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகவில் இன்று முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் முன் களப் பணியாளர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட விரும்புவோர் ஆதார் கார்டு எண்ணை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜேஎன் 1 வகை கொரோனா வேகமாகப் பரவினாலும் கூட அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே, இந்த புதிய வகை கொரோனா பாதிப்பைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இந்த புதிய கொரோனா லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்ற போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியலாம். குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.