மொபைல் போன்களுக்கு வரும் விளம்பரம்... ட்ராய் எடுத்த அதிரடி நடவடிக்கை...!
தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் ட்ராய் கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து ட்ராய் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. விளம்பரதாரர் தொல்லையில்லாத, தரமான தொலைத்தொடர்பு சேவைகளை அதிவேக தரவுகளுடன் வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விளம்பரதாரர் அழைப்பு தொல்லையை தடுக்க, ரோபோ அழைப்புகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விளம்பரதாரர் அழைப்பு இணைப்புகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் இணைப்பை துண்டித்து, அவற்றை கருப்புப் பட்டியலில் சேர்க்குமாறும் ட்ராய் அமைப்பு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த இருவாரத்தில் மட்டும், இதுபோன்ற 3.5 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 50 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுதவிர, சுமார் 3.5 லட்சம் பயன்படுத்தப்படாத/ உறுதி செய்யப்படாத குறுஞ்செய்தி தலைப்புகள் மற்றும் 12 லட்சம் வார்ப்புருப்புகள் (template) தடை செய்யப்பட்டுள்ளன என ட்ராய் தெரிவித்துள்ளது.