வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்..
பெரும்பாலான வீடுகளில் இந்தியன் டாய்லெட் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. புதிதாக வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வெஸ்டர்ன் டாய்லெட் வைத்து தான் கட்டுகிறார்கள். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் இருக்கும் இந்தியன் டாய்லெட்டை வெஸ்டர்ன் டாய்லெட்டாக மாற்றி விடுகின்றனர். வயதானவர்களுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததாக இருக்கலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டில் யார், எதை உபயோகிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?
இது குறித்த விளக்கத்தை, பிரபல புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ஒரு சிலர் டீ குடித்தாலோ, அல்லது புகை பிடித்தால் மட்டுமே சிரமம் இல்லாமல் என்னால் மலம் கழிக்க முடியும் என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், சிரமமின்றி மலம் கழிக்க வெஸ்டர்ன் டாய்லெட்டை விடவும் இந்தியன் டாய்லெட்டே சிறந்தது.
குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் மலம் கழிக்கும் போது, மலக்குடலை இறுக்கமாகப் பிடித்திருக்கும் ஆசன சுருக்குத் தசை எளிதாகவும் முழுமையாகவும் வேலை செய்யும். குத்தவைத்து உட்காரும் போது, மடிந்த நிலையிலுள்ள மலக்குடல் திறக்கும். இதனால் ஹெர்னியா எனப்படும் குடல் இறக்க பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். ஆனால் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அதிகம் முக்கி தான் மலம் கழிக்க முடியும். இது மட்டும் இல்லாமல் நாம் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே குத்தவைத்து மலம் கழிக்க பழக்குவதால், அவர்களின் கால் தசைகள் வலுப் பெறும்.
ஆனால் வயதான பிறகு, மூட்டுத் தேய்மானம் ஏற்படுவதால் அவர்களால் இந்தியன் டாய்லெட்டில் குத்தவைத்து உட்கார முடியாது. இதனால், அவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். குத்தவைத்து உட்கார முடியாத சூழல் இருந்தால், வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிக்கலாம். அவர்கள், சந்தையில் விற்கப்படும் ஃபுட் ஸ்டூல்களை பயன்படுத்தலாம். இந்த ஸ்டூலை, வெஸ்டர்ன் டாய்லெட்டில் வைத்துப் பயன்படுத்தினால், ஹெர்னியா பாதிப்பையும் தவிர்க்க முடியும். மேலும், சிரமம் இல்லாமல் மலம் கழிக்க முடியும்.