’இளம் பருவத்தினர் ஆணுறையை கூட பயன்படுத்துவது இல்லை’..!! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!!
சமீபத்தில் உலக சுகாதார மையம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ”கடந்த 10 ஆண்டு காலத்தில் ஐரோப்பாவில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார மையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஐரோப்பாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்தது என்னவென்றால், 2014இல் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 70%இல் இருந்த ஆணுறை பயன்பாடு 2022ஆம் ஆண்டு 61%ஆக குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63%இல் இருந்து 57%ஆக குறைந்துள்ளது.
மேலும், மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்டபோது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018இல் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த ஆய்வைத் தொடர்ந்து கல்வியாளர்கள், அரசுகள் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.