எடப்பாடியார் அழைக்கிறார்.! விவசாயிகளுக்காக போராட்ட களத்தில் அதிமுக.! பிப். 29 தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சினைக்கான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்த அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து அந்த கட்சியுடன் முடித்துக் கொண்டது.
இனி எப்போதும் பாஜக உடன் கூட்டணி இல்லை என அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். மேலும் அமித்ஷா கூட்டணிக்கு தூது விட்ட போதும் அதனை நான் கவனிக்கவில்லை எனக் கூறி சைலன்டாக மறுத்து வந்தார். எனினும் பாரதிய ஜனதா கட்சி குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்யாமல் இருப்பதால் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ரகசிய கூட்டணி இருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்நிலையில் சமீப காலமாக அதிமுக கட்சி பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாதாள சாக்கடைகளுக்கான பணிகள் முடிவடையாமல் இருப்பதால் சாலைகள் பழுதடைந்து இருக்கிறது. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு பல்வேறு சுவாச கோளாறுகள் மற்றும் நோய்கள் ஏற்படும் எனக் கூறி விழுப்புரம் நகராட்சியை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அதிமுக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் திலகர் திடலில் வைத்து நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 29ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.