Lok Sabha | உறுதியாகிறது அதிமுக- தேமுதிக கூட்டணி.! பிரேமலதா தலைமையில் அவசர ஆலோசனை.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. மீதும் பொது தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தல் நடைபெறும் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன .
தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை தனது கூட்டணி பற்றிய எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது. அந்தக் கட்சி பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வந்தது.
எனினும் இரண்டு கட்சிகளுமே மாநிலங்களவை உறுப்பினர் குறித்த கோரிக்கையை முன் வைத்திருந்ததால் பேச்சுவார்த்தையில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருந்தது. அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் இடையே இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்னர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக இடையேயான கூட்டணி இன்று உறுதி செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சியின் துணைச் செயலாளரான சதீஷ் பார்த்தசாரதி மற்றும் அவை தலைவர் இளங்கோவன் ஆகியோருடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தேமுதிக குழுவினர் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் அதிமுக மற்றும் தேமுதிக இடையே சமூக முடிவு ஏற்பட்டு இன்றைய கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.